November 11, 2016 தண்டோரா குழு
தமிழகத்தில் ஒரு நாளில் மட்டும் மொத்தம் ரூ. 480 கோடி அளவுக்குப் பணம் வங்கிகளில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் சதக்கத்துல்லா தெரிவித்தார்.
நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூ 500, 1000 செல்லாது என அறிவித்தார். நவம்பர் 10 முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து,பணத்தைச் செல்லுபடியாக்குவதற்காக வங்கிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பொதுமக்கள் தங்களது செல்லாத ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்காக, வங்கி மற்றும் அஞ்சலகங்களில் வியாழக்கிழமை குவிந்தனர்.செல்லாத நோட்டுகளுக்குப் பதிலாக செல்லும் நோட்டுகளை வழங்கும் பணி வியாழனன்று தொடங்கியது.
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் சதக்கத்துல்லா சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசியதாவது :
பொதுமக்கள் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வசதியாக ரிசர்வ் வங்கியில் 4 சிறப்பு கவுன்ட்டர்களுடன் மொத்தம் 8 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழகத்துக்கு 270 பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு ரூ. 20 கோடி வீதம் ரூ. 5,400 கோடி வந்துள்ளது.
இதில் வியாழக்கிழமை மட்டும் வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் ரூ.480 கோடி மதிப்பிலான புதிய நோட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. ஏ.டி.எம். மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் ஒருவர், அதிகபட்சமாக ரூ.2,000 வரை பணம் எடுக்கலாம்.இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் கூறினார்.