November 12, 2016 தண்டோரா குழு
நீதிபதிகள் நியமனத்தில் நீதிபதிகள் தேர்வுக் குழு (Collegeium) பரிந்துரை செய்த 77 பெயர்களில் 34 பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது என உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை என்பதால், பல லட்சம் வழக்குள் தேங்கியுள்ளன. தேவைப்படும் நீதிபதிகளை கொலீஜியம் எனப்படும் நீதிபதிகள் தேர்வுக் குழு மூலம் நியமிக்கும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது அந்தக் குழு பரிந்துரை செய்யும் நபர்களை நீதிபதிகளாக நியமனம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அண்மையில் தேர்வுக் குழுவின் முறைப்படி, நீதிபதிகளை நியமிக்க அளிக்கப்பட்ட பரிந்துரைகள் மீது முடிவெடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. “நீதிமன்றங்களை மூடிவிடலாம் என்று நினைக்கிறீர்களா?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் நீதிபதிகளை நியமிக்கும் தேர்வுக் குழு முறையை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கும்படி மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருந்தது.
நீதிபதிகள் தேர்வுக் குழு முறையை மேம்படுத்துவது குறித்து வரைவுத் திட்டத்தின் பிரதி, அந்தக் குழுவுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி ஆஜராகி, “நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரை செய்த 77 பெயர்களில் 34 பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது. அவர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை அனுப்பிவிட்டது.
43 பெயர்களை மறுபரிசீலனை செய்யக் கோரி, நீதிபதிகள் தேர்வுக் குழுவுக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசிடம் எந்தக் கோப்பும் நிலுவையில் இல்லை” என்று தெரிவித்தார்.