November 12, 2016
தண்டோரா குழு
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க் இறந்துவிட்டதாக ஃபேஸ் புக் வலைதளத்தில் வதந்தி தகவல் வெளியானது பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
உலகில் அதிக மக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளம் ஃபேஸ்புக். நாளுக்கும் நாள் மக்களின் தேவையை அறிந்து அதற்கு ஏற்ப பல்வேறு வசதிகளைப் பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.
அந்த வகையில், “உயிரிழந்து போன பயனாளர்களின் நினைவுகளைப் பகிர்ந்து, மரியாதை செலுத்துங்கள்” என்று சக நண்பர்களுக்கு ஃபேஸ் புக்கிலிருந்து தகவல் அனுப்பட்டுள்ளது.
அதைப் பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில், உயிரோடு இருக்கும் பயனாளர்களின் பெயர்களைத் தவறுதலாக இறந்துவிட்டதாக தகவல் அனுப்பியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். இப்படி இறந்ததாக இரண்டு லட்சம் பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் அதிர்ச்சிக்குரியது தகவல், இறந்தோர் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் பெயரும் இடம் பெற்றிருந்ததுதான். லட்சக்கணக்கான பயனாளர்களுக்கு இந்தத் தகவல் அனுப்பப்பட்டதால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களது நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்துள்ளார்கள்.
மேலும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தவற்றைச் சுட்டிக்காட்டி “டுவிட்டர்” உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக் பயனாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தத் தவறு குறித்து மன்னிப்பு கோரியுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், உயிரோடு இருப்பவர்களை இறந்துவிட்டதாக அறிவித்தது மிகவும் மோசமான தவறு என வருத்தம் தெரிவித்தது. இத்தவறு உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் விளக்க மளித்துள்ளது.