November 14, 2016 தண்டோரா குழு
பொதுமக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காகப் பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்த பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டி:
ஒருவர் ஏ.டி.எம். மையத்தில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு இருந்தது. அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, எவ்வளவு முறை வேண்டுமானாலும் எடுக்கலாம்.
நம் நாட்டில் அதிகப்படியான வங்கிகள் கிராமப்புற, புறநகர்ப் பகுதிகளில் உள்ளன. எனவே, கிராம மக்கள் அதிகம் சிரமப்படாமல் இருப்பது குறித்து பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தபால் நிலையங்களில் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம். மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை எடுக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றிவிட்டோம்.
ஓரிரு நாட்களில் அனைத்து இடங்களிலும் உள்ள ஏ.டி.எம். மையங்களில் ரூ. 2,000 வரை எடுக்கலாம். அனைத்து வங்கி ஊழியர்களும் இரவு வரை கடுமையாகப் பணியாற்றி வருகிறார்கள்.
இணையதள வழி பணப் பரிமாற்றங்களுக்கான கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வணிகர்கள் மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருப்போர், வங்கி கணக்குகளில் இருந்து வாரத்துக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.
ஏ.டி.எம். மையங்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் ரூபாய் அதிகபட்சம் ஒரு முறை 2,500 மட்டுமே எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக ரூபாய் 40,000 வரை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.