November 14, 2016 தண்டோரா குழு
“மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க பிரதமர் மோடி அழுது நாடகம் ஆடுகிறார்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு. திருநாவுக்கரசர் கிண்டல் செய்தார்.
சென்னையில் முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை தமிழக காங்கிரஸ் கொண்டாடினர். நேருவின் திருவுருவச் சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
பிரதமர் நரேந்திர மோடியின் நாடகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்களை சாகடிக்காதீர்கள் என்று தான் மத்திய பாஜக அரசை பார்த்து மக்கள் சொல்கிறார்கள் . நாடு முழுவதும் வங்கி வாசலில் வெயிலில் நின்று மயங்கி விழுந்து மக்கள் சாகிறார்கள்.
நாட்டு மக்கள் சந்திக்கும் மிகப்பெரிய துன்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம். 1,000 ரூபாய் நோட்டை ஒழித்து, ரூ.2,000 கொடுத்தால் கறுப்புப் பணம் ஒழியாது. 2,000 ரூபாய் வேண்டும் என்று பொதுமக்கள் யாராவது மத்திய அரசிடம் கேட்டார்களா…?.
2,000 ரூபாயை வைத்துக் கொண்டு சில்லரை இன்றி மக்கள் பசியும் பட்டினியுமாக அலைகின்றனர். ரூ.2,000 வைத்துக்கொண்டு டீ குடிக்கக்கூட வழியில்லாமல் இந்தியா முழுவதும் மக்கள் வேதனைப்படுகின்றனர். 100 ரூபாய் சில்லறை கிடைக்காமல் அனைவரும் அவதிப்படுகிறார்கள். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
நேரு பிறந்த நாள் விழாவில் பங்கேற்று உரையாற்றிய குஷ்பு, “ரூபாய் நோட்டு மாற்றம் அறிவிப்பால் மக்கள் பெரிய அவதிக்குள்ளாகியுள்ளனர். 50 நாட்கள் இதே நிலை நீடிக்கும் என்று மோடி அறிவித்திருப்பதால் மக்கள் மேலும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவமனைகளில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை வாங்காததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்” என்றார்.