November 15, 2016 பா.கிருஷ்ணன்
சிபிஎஸ்இ பள்ளிகளில் 10வது வகுப்புக்கான பொதுத் தேர்வு மீண்டும் கட்டாயமாக்கப்படுகிறது. இது 2017-18ம் ஆண்டிலிருந்து அமலுக்கு வரும் என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சருடன் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, நிருபர்களிடம் சாதாரண முறையில் அவர் பேசியதாவது:
பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கினாலும், 8 ஆவது வகுப்பு, 5 ஆவது வகுப்புகளுக்கான தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்.
தேர்வுகளைக் கட்டாயமாக்குவதன் முக்கிய நோக்கம் கல்வித் தரத்தை மேம்படுத்துவது, குறிப்பாக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதுதான்.
ராஜஸ்தானில் பள்ளிக் கல்வித் துறையில் பல புதுமைகளைப் புகுத்தி, கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் கல்வியின் தரம் அதிகரித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ராஜஸ்தானில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களது சேர்க்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது” என்றார் பிரகாஷ் ஜவடேகர்.