November 15, 2016 தண்டோரா குழு
சீனாவின் வணிக வளாகத்தில் இருந்த “உலகின் சோகமான விலங்கு” என விலங்குகள் பாதுகாப்பு இயக்கத்தினர் வர்ணித்த துருவக் கரடி அங்கிருந்து இடம் மாற்றப்பட்டது.
“பிட்ஸா” என்று பெயரிடப்பட்ட அந்தக் கரடி குவாங்ஷௌ நகரின் கிராண்ட்வியூ வணிக வளாகத்தில் இருந்தது. இடம் மாற்றப்பட்டதை முன்னிட்டு, அந்தக் கரடிக்கு கடந்த சனிக்கிழமை வழியனுப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
வணிக வளாகத்திற்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக “ஓஷன் வேர்ல்டு” என்ற பெயரில் 500 உயிரினங்கள் அந்த வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. வணிக வளாகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், “வழியனுப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் பிட்ஸா பாதுகாப்பாக ஞாயிற்றுக்கிழமை அப்புறப்படுத்தப்பட்டது” என்றார்.
அந்தக் கரடி பிறந்த டியான்ஜின் என்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.வணிக வளாகத்தல் சில புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால், பிட்ஸா இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தபின் திரும்பி வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச உயிரின கருணை அமைப்பு கரடியின் அவலநிலையைக் குறிப்பிடும் வகையில் “உலகின் சோகமான துருவக் கரடி” என்று அதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு.
அந்த வணிக வளாகத்தில் 40 சதுர மீட்டர் பரப்புள்ள கண்ணாடிக் கதவுகொண்ட அறைக்குள் அடங்கிக் கிடந்ததால் அந்தக் கரடிக்கு இடையூறாக இருந்ததைப் படம் பிடித்து அந்த அமைப்பு வெளியிட்டிருந்தது. போதிய வெப்பமின்றி, உடல்நலமும் மன நலமும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததைச் சுட்டிக் காட்டியது அந்தக் காட்சி.
சீனக் கொள்கை நிபுணர் பீட்டர் லீ, ”சிறிய செயற்கையான அறையில் அடைக்கப்பட்டதால், பிட்ஸா அவதிப்பட்டது பிட்ஸா. இனிமேல், வெயிலின் வெதுவெதுப்பை உணரும். புதுக் காற்றைச் சுவாசிக்கும். தனது தாய், தந்தை ஆகியோருடன் வானத்தைப் பார்த்து உற்சாகம் அடையும்” என்றார்.
“பிட்ஸாவை நிரந்தரமாகவே புதிய இடத்தில் தங்க வைக்கும்படி அங்காடி வளாக நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறோம். மீண்டும் அதே செயற்கைச் சூழலுக்கு அனுப்பி, அதற்கு இடையூறு தரவேண்டாம்” என்றும் பீட்டர் லீ கேட்டுக் கொண்டார்.
இதனிடையே சமூகவலைதளங்களில் பிட்ஸாவுக்கு அளிக்கப்பட்ட வழியனுப்பு விழா புகைப்படங்களைப் பதிவேற்றிய வணிக வளாக நிர்வாகம், “சோகமும் கண்ணீரும் தற்காலிகம்தான். அதற்கு உரிய கதகதப்பான வீட்டை அமைத்துத் தருவோம்” என்று கூறுவது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.