November 17, 2016 தண்டோரா குழு
மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற அனுமதி கிடையாது என்ற முடிவு கூட்டுறவுத் துறையை அழிக்க நடத்தப்படும் அரசியல் சதித்திட்டமே என்று கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள முதல்வர் பினரயி விஜயன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசியதாவது;
பணத்தட்டுப்பாட்டினால் வர்த்தகம் பெரிய அளவில் வீழ்ச்சி கண்டு மாநிலத்திற்கு ரூ.2,000 கோடி வரி வருவாய் இழப்பு ஏற்படும்.
மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற அனுமதி கிடையாது என்ற முடிவு கூட்டுறவுத் துறையை அழிக்க நடத்தப்படும் அரசியல் சதித்திட்டமே.
மாநில பாஜக தலைவர்களின் கருத்துகளின் பின்னணியில் மத்திய அரசின் முடிவை நாம் பார்க்க வேண்டும். அதாவது மாநில பாஜக தலைவர்கள் மாநில கூட்டுறவு வங்கிகள்தான் கறுப்புப் பணத்தின் நிலைக்களன் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.
கூட்டுறவுத் துறைகளில் கணக்கில் வராத பணம் எதுவும் இல்லை, இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது, அபாண்டமானது. மாநில சட்டப்பேரவை இயற்றிய சட்டங்களின் அடிப்படையில் இயங்கி வருவது கூட்டுறவுத் துறை.
எப்போது வேண்டுமானாலும் சட்ட ரீதியாக சோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம், கறுப்புப் பணம் அங்கு சேர இடமில்லை, சாமானிய மக்களின் பணம்தான் கூட்டுறவு துறை வசம் உள்ளது. அரசு அதனை பாதுகாப்பது அவசியம்.
கூட்டுறவுத் துறை நன்றாகச் செயல்படுவதன் மூலமே மாநிலம் முழுமையாக வங்கி நடவடிக்கைகளுக்கு வர முடியும். எனவே கூட்டுறவுத் துறை கறுப்புப் பணக்காரர்களின் புகலிடம் அல்ல. மாறாக கடினமாக உழைத்து சம்பாதித்த சாதாரண மக்களின் பணம்.
இது குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லியை தில்லியில் கடந்த வாரம் சந்தித்து பேசிய போது அவரிடமிருந்து உடன்பாடான பதிலே கிடைத்தது, எனவே, இந்திய ரிசர்வ் வங்கிதான் கூட்டுறவுத் துறையில் பணத்தை மாற்ற முடியாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநில கூட்டுறவுத் துறை மக்கள் பணத்தின் மூலம் படிப்படியாக வளர்ந்தது, கறுப்புப் பணத்தினால் திடீரென வளர்ந்ததல்ல எனவே இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்”.இவ்வாறு பினரயி விஜயன் பேசினார்.