November 21, 2016 தண்டோரா குழு
பழைய ரயில் பெட்டிகளை பொழுது போக்கு வீடுகளாக மாற்றி அதனை விற்பனை செய்யும் திட்டத்தை லக்னோ ரயில்வே கோட்டம் செயல்படுத்தி வருகிறது.
சுமார் 25 ஆண்டுகள் பழைய ரயில் பெட்டிகளை ஆய்வு செய்து அதனை விற்பனை செய்ய லக்னோ ரயில் கோட்டம் முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான ரயில் பெட்டிகளை வாங்கிக் கொள்ளலாம்.
அவ்வாறு வாங்கும் ரயில் பெட்டிகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பொழுதுபோக்குக் கூடாரங்களாகவோ, நூலகங்களாகவோ, வீடுகளாகவோ, தங்கும் விடுதிகளாகவோ ரயில்வே துறை மாற்றி வடிவமைக்கும். பின்னர், அவற்றின் மீது ரயில்வேயின் சின்னம் பொறிக்கப்பட்டு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்கு வரும் பழைய ரயில் பெட்டிகள் ரயில்வே துறையின் அதிகாரிகள் முழுவதுமாக ஆய்வு செய்த பின்னரே அனுப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பயன்படுத்த இயலாத பழைய ரயில் பெட்டிகள் இரும்பு ஆலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. அதற்கு மாறாக, இது போன்ற மாற்று முயற்சியின் மூலம் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் விற்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தங்கும் இடங்களாகவோ வீடுகளாகவோ மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை வாங்க முடியும்.
ஏலத்தின் அடிப்படையில்தான் பழைய ரயில் பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. ரயில் பெட்டியின் எடைக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.கடைசியாக 30 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு ரயில் பெட்டியை ஒரு வாடிக்கையாளர் 1,10,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார் என லக்னோ ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.