November 22, 2016 தண்டோரா குழு
வாடகைத்தாய் நடைமுறையை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதைத் தடை செய்யும் மசோதா மக்களவையில் திங்கள் கிழமை (நவம்பர் 21) அறிமுகம் செய்யப்பட்டது.
ரூபாய் நோட்டுகளை வாபஸ் விவகாரத்தை முன் வைத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன. அந்தக் கூச்சல்-குழப்பத்துக்கு இடையே வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) மசோதாவை (2016) மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவின் அம்சங்கள்:
இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததும் வாடகைத்தாய் நடைமுறையை வர்த்தக லாப நோக்கில் பயன்படுத்துவதற்கு முழு அளவிலான தடை அமலுக்கு வந்துவிடும். எனினும், குழந்தைப் பேறில்லாத தம்பதிகளின் நலன் கருதி, லாப நோக்கமின்றி மேற்கொள்ளப்படும் வாடகைத்தாய் சேவையானது கடும் விதமுறைகளுடன் அனுமதிக்கப்படும்.
இந்த மசோதா மூலம் இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும். வெளிநாட்டினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் ஆகியோருக்கு இந்த நடைமுறையைப் பின்பற்ற அனுமதி அளிக்கப்படாது. மேலும், ஓரினச் சேர்க்கையாளர்கள், கணவன்-மனைவி என்று ஜோடியாக இல்லாமல் தனி நபராக இருக்கும் பெற்றோர் (தாய் அல்லது தந்தை), திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடிகள் ஆகியோரும் இந்த வசதியைப் பெற முடியாது.
அதேபோல், ஏற்கெனவே குழந்தையைப் பெற்றிருக்கும் தம்பதிகளும் வாடகைத்தாய் முறையைப் பயன்படுத்த முடியாது. எனினும், அவர்கள் வேறொரு சட்டத்தின் கீழ் குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். தற்போது வாடகைத்தாய் முறையை நெறிப்படுத்துவதற்கு எந்தச் சட்டமும் நடைமுறையில் இல்லாத காரணத்தால் இந்தியா, பல்வேறு நாட்டைச் சேர்ந்த தம்பதிகளுக்கு வாடகைத்தாய் முறைக்கான மையமாகக் காணப்படுகிறது.
இது தொடர்பான சட்டம் எதுவும் அமலில் இல்லாததால் பல்வேறு ஒழுக்கத்தை மீறிய நடைமுறைகள் தொடர்பான சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும், வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுத்தரும் தாய்மார்கள் ஏமாற்றப்படுவதோடு, இந்த முறை மூலம் பிறக்கும் குழந்தைகள் கைவிடப்படுவதும் நடைபெறுகிறது.
இந்நிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மசோதா, சட்டரீதியாகத் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் தங்கள் திருமணத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின் வாடகைத்தாய் நடைமுறையைப் பயன்படுத்த அனுமதி அளிக்கிறது. எனினும், ‘தாங்கள் மருத்துவரீதியாக குழந்தையைப் பெற்றெடுக்க இயலாதவர்கள்’ என்பதை அவர்கள் ஒரு மருத்துவரிடம் இருந்து சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும்.
பெண்களில் 23 முதல் 50 வயது வரை உள்ளோரும், ஆண்களில் 26 முதல் 55 வயது வரை உள்ளோரும் இந்த வாடகைத்தாய் நடைமுறையைப் பயன்படுத்திக் கொள்ளத் தகுதி படைத்தவர்களாவர்.