November 22, 2016 தண்டோரா குழு
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒரு போதும் ஒப்பிட முடியாது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டார்.
மத்தியில் பா.ஜ.க வெற்றி பெற்றதிலிருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பத்திரிகையாளர்களை அதிக அளவு சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். காங்கிரஸ் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நிருபர்களிடம் பேசி வந்தார்.
“பிரதமர் மோடி போன்ற இந்தியாவில் வேறு எந்த பிரதமரும் இல்லை. காங்கிரஸில் மோடிக்கு இணையாக தற்போது தலைவர்களே இல்லை, இந்திரா காந்திக்கு இணையாக மோடி உள்ளார்” என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கட்சிப் பொதுகூட்டங்களில் பேசி வருகின்றனர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புது தில்லியில் செவ்வாய்க்கிழமை தனியார் தொலைகாட்சிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பேசியுள்ளார். அவரது பேட்டியின் ஒரு பகுதி:
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி நாட்டு மக்களுக்காகத் தன்னுடைய உயிர் உட்பட அனைத்தையும் கொடுப்பதற்காகத் தயாராக இருந்தார். துயரிலுள்ள மக்களிடம் அவர் மிகவும் பரிவுடன் இருந்தார்.அது தற்போதைய அரசியலில் இல்லாமல் போய்விட்டது. இந்திரா காந்தியின் கொள்கையால் கவரப்பட்டு அரசியலுக்கு நான் வந்தேன்.
பா.ஜ.கட்சியில் உள்ளது போன்று நரேந்திர மோடிக்கு இணையாக காங்கிரஸ் கட்சியில் தலைவர் யாரும் இல்லை என்ற கருத்தை நான் ஏற்க மாட்டேன். அது மட்டுமின்றி, இந்திராவுடன் மோடியை ஒரு போதும் ஒப்பிட முடியாது.
அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும்.
இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.