November 22, 2016 தண்டோரா குழு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிமிருந்து புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றபட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) காலையில் பாதுகாப்புப் படையினருக்கும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்றது.
இதில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அவர்களிடம் இருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ.15 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளன.
இந்நிலையில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர், அவை கள்ள நோட்டுகளா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு 15 நாட்கள் கூட முழுமையாகக் கடக்காத நிலையில், பயங்கரவாதிகளிடமிருந்து புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.