November 24, 2016 தண்டோரா குழு
“ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு, அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்திலும் மத்திய அரசு சரியான வழியில் சென்று கொண்டிருகிறது” என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் மக்கள் கடும் பணத்தட்டுப்பாட்டால் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
வங்கியில் பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் நின்ற போதும் பணம்பெற முடியவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், “மத்திய அரசு சரியான பாதையில்தான் செல்கிறது” என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் அருண் ஜேட்லி வியாழக்கிழமை பேசியதாவது:
ரூபாய் நோட்டு செல்லாது நடவடிக்கையில் மத்திய அரசு சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை முட்டாள் தனம் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. “2 ஜி பிரச்சனையும் இதுவும் ஒன்று” என எதிர்க்கட்சியினர் கருதுகிறார்கள்.
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அருண் ஜேட்லி பேசினார்.