November 24, 2016 தண்டோரா குழு
500, 1000 ரூபாய் நோட்டு நடவடிக்கையில் மத்திய அரசின் கடுமையான போக்கைக் கண்டித்து நவம்பர் 28-ம் திமுக சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்னேற்பாடு எதுவுமின்றி, திடீரென அறிவித்து 16 நாட்களாகி விட்டது. இன்னும் பணத் தட்டுப்பாடு பிரச்சினை சிறிதும் தணிந்த பாடில்லை.
விளிம்பு நிலை, ஏழை எளிய, நடுத்தர வகுப்பினர், விவசாயிகள், மீனவர், நெசவாளர்கள், சிறு வணிகர்கள் போன்றோர் அனுபவிக்கும் தொல்லைக்கும் துன்பத்திற்கும் அளவில்லை.
அத்தியாவசியப் பொருள்கள் கூட வாங்க முடியாத நிலையில், பொதுமக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களின் வாசல்களில் பல மணி நேரம் காத்துக் கிடக்கின்றனர். அவர்களில் இதுவரை 75 பேர் மரணமடைந்துவிட்டனர்.
பிரதமர் மோடியின் பிடிவாதத்தினால், கடந்த சில நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், இந்தப் பிரச்சினையை மிகவும் தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சியினர் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக ஓரணியில் நின்று போராடி வருகின்றார்கள்.
நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பி வரும் எதிர்க் கட்சிகள், வாக்கெடுப்புடன் கூடிய ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுத்து அதனை அவையிலே விவாதிக்க வேண்டும் என்றும், கூட்டு நாடாளுமன்றக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி மக்கள் இயக்கத்தை வலுப்படுத்திட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மத்திய அரசின் இந்தக் கடுமையான நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வரும் 28-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து அறிவித்துள்ளார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் வரும் 28-ம் தேதியன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், மத்திய அரசு அலுவலகங்களின் முன்னால் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பிரிவு மக்களின் ஒத்துழைப்புடன், கழகத் தோழர்கள் அனைவரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத முடிவுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.