November 26, 2016 தண்டோரா குழு
பினாமி சொத்துகளையும் தடுத்தால் மட்டுமே கறுப்புப் பண ஒழிப்பு தீர்வை எட்ட முடியும் என பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
பழைய ரூபாய் 500,100 நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது தொடர்பாக பல்வேறு தரப்பினர் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கிவிட்டது. இந்நிலையில் ரூபாய் நோட்டு வாபஸ் துணிச்சலான நடவடிக்கை என பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாட்னாவில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் நிதீஷ் குமார் பேசியதாவது:
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெற்றது மத்திய அரசின் துணிச்சலான நடவடிக்கை. இருப்பினும் அதை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பினாமி சொத்துகளையும் தடுத்தால் மட்டுமே கறுப்புப் பண ஒழிப்பு தொடர்பாக சிறந்த தீர்வை எட்ட முடியும். மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரிப்பதால், பிகாரில் உள்ள மகா கூட்டணியில் பிளவு ஏற்படாது.
இவ்வாறு நிதீஷ்குமார் கூறினார்.