November 28, 2016 தண்டோரா குழு
இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தை எளிமைப்படுத்தும் வகையில் உரிய விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் மரபுகளை இயற்றும் பணிகளில் சுகாதார அமைச்சகம் ஈடுபட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
புது தில்லியில் ஞாயிற்றுகிழமை நடைபெற்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நாட்டின் தேவைக்கேற்ப தற்போது உறுப்புகள் தானம் செய்யப்படுவதில்லை. உடல் உறுப்புகள் தேசத்தின் வளம். அதை வீணாக்கக் கூடாது. உறுப்புகளை தானம் செய்வது என்பது பிறருக்கு அளிக்கும் அன்பளிப்பாகும்.
பொதுநல, சமத்துவ மற்றும் தார்மீக கடமையாகும். உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் முடிந்த வாழ்க்கையை, வேறொருவர் மூலம் புதுப்பித்துக் கொள்ள முடியும். எனவே உடல் உறுப்பு தானம் தேசிய இயக்க மாக மாற வேண்டும்.
மரணமடையும் நேரத்திலும் சக குடிமகனின் நலனில் அக்கறை கொண்டவர் என்பதையும் மனிதத்தைப் பெரிய அளவில் நாம் போற்றுவதையும் உலகுக்கு எடுத்துக் கூற வேண்டும். உறுப்பு தானத்தை எளிமைப்படுத்துவதற்கான விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் மரபுகளை இயற்றும் பணிகளில் சுகாதார அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
ஆண்டுதோறும் நமது நாட்டில் 1.5 லட்சம் பேர் மூளைச் சாவு அடைகின்றனர். அத்தனை பேரிடம் இருந்தும் உறுப்புகளை தானமாகப் பெறுவதன் மூலம் சில லட்சம் நோயாளிகளைக் காப்பாற்ற முடியும்.
உறுப்பு தான பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் தேசிய உறுப்பு மாற்று திட்டத்தையும் சுகாதார அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் டுவிட்டர் மூலம் வெளியிட்ட செய்தியில் மத்திய அமைச்சர் நட்டா, “உறுப்பு தானம் செய்வதற்கு கடந்த ஜூன் வரையில் 10 ஆயிரம் பேர் உறுதி எடுத்துக் கொண்டுள்ளனர். இப்போது ஒரு லட்சம் பேர் இணைந்துள்ளனர். அடுத்த ஆண்டு இது 20 லட்சமாக உயரும் என விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.