November 28, 2016 தண்டோரா குழு
மேற்கு உகாண்டாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பிரிவினை கோரும் பழங்குடியினத் தலைவருடன் தொடர்புள்ள தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான சண்டையில் 55 பேர் உயிரிழந்தனர் என்று உகாண்டா காவல் துறை ஞாயிறன்று தெரிவித்தது.
இது குறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரூ ஃபெலிக்ஸ் கவீசி கூறியதாவது:
“காசேசே நகரில் சனிக்கிழமை நடந்த இந்தச் சண்டையில் 14 போலீஸ் அதிகாரிகளும், 41 தீவிரவாதிகளும் இறந்தனர். ருவென்ஸுரு அரசின் பாதுகாப்புப் படையுடன் தொடர்புள்ள தீவிரவாதிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் சண்டை நடந்தது.
உகாண்டா நாட்டின் ராணுவமும் காவல் துறையும் இணைந்து காசேசே நகரில் கடந்த சனிக்கிழமை ரோந்தில் ஈடுபட்டபோது, தீவிரவாதிகள் சக்திவாய்ந்த கையெறி குண்டுகளை வீசினர். அதில் ஒரு வீரர் காயமடைந்தார். அதையடுத்து, பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, தற்காப்புக்காக நான்கு தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் மோதல் நடந்தது. காலையில் தொடங்கி மாலை வரையில் சண்டை நடந்தது” என்றார்.