November 28, 2016 தண்டோரா குழு
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிகளையும் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 29) கியூபா செல்கிறார்.
அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ சனிக்கிழமை 90-வது வயதில் மரணமடைந்தார். அவருடைய விருப்பத்தை ஏற்று, அவர் இறந்த சிறிது நேரத்துக்குள் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.
அவருடைய சாம்பல் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளாசா டி லா ரெவல்யூஷன் என்னும் இடத்தில் உள்ள ஜோஸ் மார்டி மெமோரியலில் அந்நாட்டு மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவர். நிறைவாக அவரது சாம்பல் தலைநகர் ஹவானாவில் உள்ள சாண்டா இபிஜெனியா கல்லறையில் வரும் டிசம்பர் மாதம் 4-ம் தேதி நல்லடக்கம் செய்யப்படும்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மற்றும் உலகில் உள்ள முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கியூபாவில் 9 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில், “ஃபிடல் காஸ்ட்ரோ, 2௦-வது நூற்றாண்டின் ஒரு தலைசிறந்த தலைவர். இந்தியாவின் நல்ல நண்பர்” என்று கூறினார்.
காஸ்ட்ரோவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பங்கேற்க ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்திய குழுவினர் கியூபா நாட்டுக்குப் பயணமாகிறார். அவருடன், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பயணமாகின்றனர்.