November 29, 2016 தண்டோரா குழு
அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாணத்தில் ஞாயிறு (நவம்பர் 27) நடந்த அழகிப் போட்டியில் பங்கேற்ற முஸ்லிம் பெண் உடல் முழுவதையும் மறைக்கும் பர்தா உடை அணிந்து வந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாணத்தில் மிஸ் ‘மின்னெசோட்டா யு.எஸ்.ஏ.’ அழகிப் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் 44 பெண்கள் கலந்து கொண்டனர்.
அப்போட்டியின் ஒரு பிரிவாக நீச்சல் உடை அணிந்து உடல் அழகை காட்டும் போட்டி உண்டு. அதில் கலந்து கொண்ட பெண்கள் நீச்சல் உடையில் வந்தனர். ஆனால் ஹலிமா ஏடன் (19) என்ற முஸ்லிம் பெண் உடல் முழுவதையும் மறைக்கும் பர்தா உடை அணிந்து வந்தார். அதில் வெற்றி பெற்ற அவர் அரையிறுதி போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார்.
போட்டிக்கு முன்னதாக மின்னெசோட்டா அரசு வானொலிக்கு அளித்த பேட்டியில், “நான் யார் என்று உலகத்திற்கு காட்ட இந்த போட்டி சரியான மேடை” என்று குறிப்பிட்டார். பர்தாவுடன் பங்கேற்ற ஹலிமா ஏடன் சோமாலியாவில் பிறந்து, அமெரிக்காவில் வசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹலிமா கென்ய அகதிகள் முகாமில் பிறந்தவர். பின்னர் பெற்றோருடன் அமெரிக்காவில் 7 வயதில் குடி புகுந்தவர்.