November 29, 2016 தண்டோரா குழு
நாடு முழுவதும் நவம்பர் 27ம் தேதி வரை ரூ.8.11 லட்சம் கோடி பணம் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8 ம் தேதி இரவு அறிவித்தார். பழைய நோட்டுகளை டிசம்பர் இறுதிக்குள் வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
இதனால், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் குவிந்தனர். தனிநபர் வங்கி கணக்கு உள்ளவர்கள் ரூபாய் 2.5 லட்சம் வரை பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும்.
அதற்கு மேல் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வருமான வரி கணக்கு காட்ட வேண்டும். இதையடுத்து, வங்கி கணக்கு வைத்துள்ளோர் தங்களது கணக்கில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து வருகின்றனர். வங்கி கணக்கு இல்லாதோர் அரசு வழங்கி உள்ள அடையாள அட்டையைக் காண்பித்து பழைய நோட்டுகளைக் கொடுத்து புது நோட்டுகளை மாற்றிக் கொண்டனர்.
இது குறித்து சென்னை இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “நாடு முழுவதும் நவம்பர் 10 ம் தேதி முதல் நவம்பர் 27ம் தேதி வரை மொத்தம் ரூ.8.11 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரூ.2.16 லட்சம் கோடி வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ரூ.33,948 கோடி மதிப்பில் புதிய நோட்டுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.