December 1, 2016 தண்டோரா குழு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை மறைந்தார். அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த அன்னாசாமி மற்றும் சந்தோசியம்மாள் ஆகியோருக்கு மகளாக பிறந்தவர் ரஞ்சிதம். ஆசிரியராகச் சேவையாற்றிய அவர், படிப்படியாக முன்னேறி தலைமையாசிரியர் என்ற நிலைக்கு உயர்ந்தார்.
ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள மணல்விளை என்ற கிராமத்திலுள்ள, ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து பிறகு ஓய்வு பெற்றார்.
ரஞ்சிதம் அம்மாள் கடந்த சில தினங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (டிசம்பர் 1) உயிரிழந்தார். அவருக்கு வயது 82.
அவரது உடல் தி.நகர் சிஐடி நகரில் உள்ள நல்லகண்ணு இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நல்லகண்ணுவின் பணியில் குறுக்கிடாமல் பொதுவாழ்க்கை வெற்றிகரமாக அமையவும், அவர் மக்களிடம் நன்மதிப்பைப் பெறவும் ரஞ்சிதம் அம்மாள் அளித்த ஆதரவும், ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானது.
நல்லகண்ணு – ரஞ்சிதம் தம்பதிக்கு காசிபாரதி, ஆண்டாள் என இரு மகள்கள் உள்ளனர். காசிபாரதி ஆசிரியராகவும், ஆண்டாள் டாக்டராகவும் உள்ளனர். ரஞ்சிதம் மறைவுக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.