December 3, 2016 தண்டோரா குழு
கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவிய குற்றச்சாட்டு தொடர்பாக அரசுடமை வங்கிகளைச் சேர்ந்த 27 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8-ம் தேதி பழைய ரூ 500, 1000 செல்லாது என அறிவித்தார். அதையடுத்து தொழில் அதிபர்கள், கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் தங்களிடம் உள்ள கணக்கில் வராத பணத்தைக் குறுக்கு வழியில் மாற்ற முயன்று வருவதாகப் புகார் வந்தது.
அவர்களது கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு வங்கிகளில் பணியாற்றும் சில முக்கிய அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாகத் தகவல் வந்தது.அதையடுத்து, நாடு முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அதில் கணக்கில் வராத பல லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர். அதுபோல் வங்கி அதிகாரிகளைக் கண்காணித்த மத்திய அரசு 27 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவிய குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசுடைமை வங்கிகளை சேர்ந்த 27 அதிகாரிகள் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 அதிகாரிகள் பணயிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நேர்மையான பணப் பரிவர்த்தனை நடப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எந்த வகையிலும் மோசடி பணப் பரிமாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இத்தகைய மோசடியில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.