August 25, 2021 தண்டோரா குழு
கோவை குறிச்சி குளத்தை சுற்றி புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப்பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.பின்னர் 85வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளியில் மாணவ, மாணவிகளின் சேர்க்கைகள் குறித்தும், பள்ளியின் வகுப்பறை வசதி, ஆய்வக வசதி, கணினி அறை, மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை குறித்தும் பொறியியல் பிரிவு அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் மாநகராட்சி கமிஷனர் கேட்டறிந்தார். பின்னர் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் செல்வபுரம், பேரூர் மெயின் ரோடு, பாரதி ரோடு மற்றும் தெலுங்குபாளையம், முத்தைய உடையர் வீதி ஆகிய பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளுக்காக குடிநீர் குழாய்கள் இணைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி கமிஷனர் சுந்தர்ராஜன், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ், 24 மணிநேர குடிநீர் திட்ட மேலாண்மை ஆலோசகர் குழுத் தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.