September 7, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், விளாங்குறிச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கமிஷனர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு முன்பு, பின்பு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் பதிவு செய்து, பராமரிப்பது குறித்த பதிவேடுகளையும், புற நோயாளிகளின் பதிவேடு மற்றும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ‘உதவித்தொகை வழங்கப்படுவது கேட்டறிந்தார்.
பின்னர், அங்குள்ள பராமரிப்பு பதிவேடுகள் மற்றும் கணினி பதிவேற்றம் செய்யும் மையத்தில் அதன் செயல்பாடுகளைக் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அம்மையத்தில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிட பணிகள் குறித்து பார்வையீட்டார். பின்னர், விளாங்குறிச்சி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளியின் வகுப்பறைகள் வசதி, மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் குறித்து, பொறியியல் பிரிவு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம் பள்ளியின் உட்புறபகுதிகள் மற்றும் சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென தெரிவித்தார்.
அப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டிட புனரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு கட்டிடத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதன் அளவீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் மாநகராட்சிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடப்பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் (கிழக்கு) ஞானவேல், கீழக்கு மண்டல உதவி கமிஷனர் ரங்கராஜன், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ். மண்டல சுகாதார அலுவலர் முருகா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்ஆகியோர் உடனிருந்தனர்.