September 9, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி உதவி பொறியாளர்கள், இளம்பொறியாளர்கள் நகரமைப்பு பிரிவு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணிபுரிய மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி, பொறியியல் பிரிவில் மண்டலங்களில் பணியாற்றி வரும் இளம் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் தற்போது கவனித்து வரும் வார்டு பணிகளுடன் கூடுதலாக நகரமைப்பு பிரிவு தொடர்பான அனுமதியற்ற. அனுமதிக்கு மாறான கட்டிடங்களின் மீதான அறிவிப்பு சார்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், சாலைகள், பொது இடங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொது ஒதுக்கீடு இடங்களை பாதுகாப்பு செய்வது, இடிபாடு நிலையில் உள்ள கட்டுமானங்களை கண்டறிந்து அறிவிப்பு சார்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுதல், அனுமதியற்ற மனைப்பிரிவு மனையிடங்களில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ள விபரத்தை கண்டறிந்து வரன்முறை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், கட்டிட அனுமதியின்படி கட்டுமானம் செய்யப்படுவதை அடித்தள கட்டுமானத்தின் போதே கள ஆய்வு செய்து உறுதிபடுத்துதல், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளுக்குட்பட்ட நகரமைப்பு தொடர்பான வழக்குகளில் எதிர்வாதுரை மனு தாக்கல் செய்தல் மற்றும் தொடர் வழக்கு நடவடிக்கை தொடர்பான பணிகள் ஆகிய பணிகளை நகரமைப்பு பிரிவு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்”
இவ்வாறு அவர் கூறினார்.