September 9, 2021 தண்டோரா குழு
விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் முகூா்த்த நாளையொட்டி கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுகிறது கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு வழிகாட்டுதலின்படி விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனி நபர்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு அவற்றை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை வீடுகளில் கொண்டாட பொது மக்கள் தயாராகி வருகிறார்கள் மேலும் முகூர்த்த நாட்களாக இருப்பதாலும் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு பூ வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவை ஆர்எஸ் புரம் பூ மார்க்கெட்டில் அதிக எண்ணிக்கையில் கூட்டம் காணப்பட்டது இதனால் தற்போது பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
பூக்கள் விலை குறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில்,
விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூா்த்த நாள் என்பதால் பூக்கள் வரத்து அதிகரித்து இருந்தாலும் பூ விலை உயர்ந்துள்ளது.மல்லிகை கிலோ 1200க்கும் முல்லை பூ கிலோ 800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர ஜாதிப்பூ 600 ரூபாய்க்கு சம்பங்கி 400 ரூபாய்க்கும் செவ்வந்தி 120 ரூபாய்க்கும் மாலை தயாரிக்க உதவும் கோழிக்கொண்டை பூ 150 15 ரோஜாப்பூ கொண்ட கட்டு ரூ 150 என்று விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
பூ மார்க்கெட்டில் கூட்டம் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதால் சமூக இடைவெளியை கடைபிடித்து பூக்களை வாங்கி செல்லுமாறு மாநகராட்சி சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.