September 10, 2021 தண்டோரா குழு
கோவை லாலி ரோட்டில் அமைந்துள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தில் வேளாண் கருவிகள் படக்காட்சி அரங்கத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர், தொழில்நுட்ப கருவிகளை பார்வையிட்டனர்.
இதையடுத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன், முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக், பையா கவுண்டர் மற்றும் வேளாண் அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,
திமுக ஆட்சியில் உழவுத் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தனி பட்ஜெட் ஏற்படுத்தி உள்ளது. உழவர் வாழ்வில் முன்னேற்றத்திற்கு திமுக அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த வேளாண் கருவிகள் கண்காட்சி நடைபெற்றது என தெரிவித்தார்.
மாநில முழுவதும் 1,160 வேளாண் உபகரணங்கள் விவசாயிகளுக்கு வாங்கி குறைந்த வாடகைக்கு அளிக்கின்றனர். இதில், கோவை மாவட்டத்தில் 52 கருவிகள் வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கருவிகளுக்கு மானியம் உள்ளது என தெரிவித்தார். மேலும் கோவையில் கொரோனா அதிகரித்து இருந்தது. இதனை கட்டுப்படுத்த முதல்வர் தனிக்கவனம் செலுத்தி எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு
200-க்குள் வந்துள்ளது.
கொரோனா 3-ம் அலை பரவல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் 30 லட்சம் பேர் உள்ளனர் . இவர்களில் தற்போது வரை 22 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், நாளை மறுநாள் கோவையில் மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தடுப்பூசி போட்டால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என கூறினார். மேலும் வனத்துறையில் பசுமை இயக்கம் துவங்கி முதல்வர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் இணைத்து 10 ஆண்டுகளில் வனப்பரப்பை 33 சதவீதம் வனமாக மாற்ற தொலைநோக்கு திட்டம் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் நிலப்பரப்பு ஒரு லட்டத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோ மீட்டர். வருடத்திற்கு ஒரு சதவீதம் வனமாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் பத்து ஆண்டுகள் திட்டம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் வருடத்திற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 60 எக்டர் மரம் நட வேண்டிய சூழல் உள்ளது. இத்திட்டத்தில்,
வேளாண் துறையை இணைத்து செயல்படும்.
மத்திய, மாநில அரசுகள் மானியம் மூலம் 73 லட்சம் நாற்றங்கால் நிதி பெறப்படும். மேலும், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வன அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி எந்த மரக்கன்று நட வேண்டும் என கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் முதல்வராக உள்ளார் என நாளிதழ் செய்திகள் கூறுகின்றன. பத்து ஆண்டுகள் காலம் திமுக ஆட்சி செய்தால் இந்திய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக மாறும். இதற்கு,நாங்கள் மட்டும் இல்லை அனைவருக்கும் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
மேலும், வெள்ளை ஈ பாதிப்பு தடுக்க வேளாண் அலுவலர்களிடம் விவசாயிகள் ஆலோசனை பெறலாம். யானை மனித மோதல் நடவடிக்கை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், புதிய முயற்சியாக அகழியின் அளவை அகலப்படுத்தி அங்கு கான்கிரீட் சுவர் அமைக்க
திட்டமிடப்பட்டுள்ளது. மின்வேலி போன்றவை போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.