December 7, 2016 தண்டோரா குழு
ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பின் மூலம் பிரதமர் மோடி நாட்டின் 90 சதவீத மக்களை யாசகர்களாக மாறிவிட்டார் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
லக்னோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்பேத்கரின் 61-ஆவது நினைவுதின நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்றார்.
அதில் அவர் பேசியதாவது:
நான் ஒரு யாசகன் என்று சொல்லும் மோடி இன்னமும் யாகசகராக மாறிவிடவில்லை. ஆனால், நாட்டின் 90 சதவீத மக்களை அவர் யாசகர்களாக்கி விட்டார். அவர் எடுத்த ரூபாய் நோட்டு வாபஸ் முடிவானது சாமானிய மனிதனைத் திவாலாக்கி விட்டது.
இந்த முடிவானது மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விட்டது. அவர்கள் உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பது மட்டுமின்றி இத்தேர்தலில் அக்கட்சி கடைசி இடத்தைப் பெறுவதையும் உறுதிப்படுத்துவார்கள். மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கே இங்குமங்கும் அலையவைக்கப்பட்டது கேலிக் கூத்தானது.
பகுஜன் சமாஜ் கட்சி கறுப்புப் பணத்துக்கும் ஊழலுக்கும் எதிரானது அல்ல. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன்பு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததையே எங்கள் கட்சி ஆட்சேபிக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.