September 17, 2021 தண்டோரா குழு
கோவையில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.பெரியாரின் சிலைகள் உள்ள அனைத்து இடங்களிலும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு இன்று காலை முதல் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இங்கு வரும் பலரும் பெரியாரின் சிந்தனைகள் வாழ வேண்டும் என்றும் பெரியாரின் புகழ் ஓங்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். பலரும் அவரது சிலையின் அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், திமுக நிர்வாகிகள் நா.கார்த்திக், பொங்கலூர் பழனிசாமி,மற்றும் திமுக வழக்கறிஞர் தண்டபாணி,கணேஷ்குமார், சிங்கை ரவிச்சந்திரன், மனோகரன், சேரலாதன், ஜெயமணி,முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், முருகவேல், பகுதி இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், சுதாகர், சந்தோஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேசமயம் தமிழக அரசு பெரியாரின் பிறந்த நாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.