September 17, 2021 தண்டோரா குழு
கோவை நவாவூர் மருதாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்.இவரது மனைவி கிருஷ்ணவேணி (42). இவர் தெலுங்குபாளையத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தார்.
இந்த நிலையில் அவருக்கு அரசு பணி கிடைத்ததை தொடர்ந்து அந்த கல்லூரியில் இருந்து விலகினார்.பின்னர் தனது அசல் பட்ட படிப்பு சான்றிதழ்களை தரும்படி அந்த கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டார். ஆனால் கல்லூரி நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கிருஷ்ணவேணி தனது அசல் சான்றிதழ்களை வழங்கக்கோரி கோவை மாவட்ட நிரந்த மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், நீதிபதியுமான உமா ராணி, வரும்27-ந் தேதிக்குள் தனியார் நர்சிங் கல்லூரி நிர்வாகம், கிருஷ்ணவேணியின் அசல் சான்றிதழ்களை நிரந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் ரூ.25 ஆயிரம் அபராத தொகையினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.