September 18, 2021 தண்டோரா குழு
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆணிக்காலணிகள் அணிந்து தொடர்ந்து 30 நிமிடங்கள் கரகாட்டம் ஆடி இளைஞர் சாதனை படைத்துள்ளார்.
கோவை காந்திமாநகரில் உள்ள கிராமிய புதல்வன் அகாடமியில் நாட்டுப்புற கலைகளை பயின்று வருபவர் கல்லூரி மாணவர் அஸ்வின். தேனி மாவட்டம் அந்தோணி,விமலா தம்பதியினரின் மகனான இவர் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கிராமிய கலையில் சாதனை படைத்துள்ளார்.
அதன் படி தனது கால் பாதங்களில் ஆணிக்காலணிகள் அணிந்தபடி தலையில் கரகம் வைத்து தொடர்ந்து 30 நிமிடங்கள் கரகாட்டம் ஆடி பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.முன்னதாக சாதனை துவக்க விழா காந்திமா நகர் கிராமிய புதல்வன் அகாடமி அரங்கில் நடைபெற்றது.ஐ.நா.வின் இளைஞர் நலன் தூதுவர் டாக்டர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் சர்வதேச மாணவர்கள் சபை மற்றும் கூட்டமைப்பின் தலைவர் அன்சாரி,நீலகிரி உதவும் சிறகுகள் அறக்கட்டளையின் தலைவர் விஜயராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவர் அஸ்வினுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இது குறித்து சாதனை மாணவர் அஸ்வின் கூறுகையில்,
தமிழர் கிராமிய கலைகளை அண்டை மாநிலமான கேரளாவிலும் பரப்பும் விதமாக மூணாறில் கிராமிய புதல்வன் அகாடமியின் கிளையை துவக்கி கேரள இளைஞர்களுக்கும் தமிழ் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை கற்று கொடுக்க இருப்பதாக தெரிவித்தார்.
சாதனை மாணவரின் உலக சாதனை முயற்சியை கூடியிருந்த நாட்டுப்புற கலைஞர்கள் கைகளை தட்டி ஊக்கப்படுத்தினர்.