September 18, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்ட திறன் பயிற்சி மைய அலுவலகத்துடன் இணைந்து கொடிசியா சார்பில் தொழில் திறன் பழகுநர் பயிற்சி வழங்கும் முகாம் கோவை தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியதாவது:
குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10ம் வகுப்பு படித்திருக்கும் அனைவரும் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு கொடிசியாவின் உறுப்பினர்களாக உள்ள தொழிற்சாலைகளில் தொழிற் பழகுநர் பயிற்சியாக ஒன்று முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பணி வழங்கப்படும்.
பயிற்சி பெறுவோருக்கு மெஷினிஸ்ட், பிட்டர், சிஎன்சி புரோகிராமிங் மற்றும் ஆப்ரேட்டர் ஆகிய மூன்றில் ஒரு பயிற்சி தகுதிக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும். இந்த தொழிற் பழகுநர் பயிற்சி பெறும் காலத்தில் பயிற்சி பெறுவோருக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் வைத்திருப்பவர்கள் நமது நாட்டில் மட்டுமின்றி அயல்நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளிலும் பணிபுரிய முடியும். இந்த பயிற்சி முகாமில் 10 மற்றும் 12 வகுப்பு முடித்தவர்கள் பட்டதாரிகள், முதுநிலை பட்ட படிப்பை தொடராதவர்கள் என பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அடுத்த தொழில் திறன் பழகுநர் பயிற்சி முகாம் வரும் 26ம் தேதி கோவை தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.