September 23, 2021 தண்டோரா குழு
கோவை மாநகரில் கந்து வட்டி வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குடும்பசூழல் மற்றும் கொரேனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தொழிலாளர்கள், சிறு, குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் கந்துவட்டி நிறுவனங்களை அணுகி அதிக வட்டியுடன் கூடிய கடன் பெறுகின்றனர்.
சில இடங்களில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபடும் நபர்கள் நேரிடையாக தொழிலாளர்கள், தொழில் முனைவோர் வீடுகளுக்கே சென்று பணம் வழங்கி வருகின்றனர். சிலர் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கின்றனர்.
கந்துவட்டி கும்பலை சார்ந்தோர் அலுவலகம் அமைத்து செயல்பட்டால் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தால் அலுவலகம் அமைக்காமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்து பணம் கொடுப்பதும், வசூலிப்பதும் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். கடன் பெற்றவர்கள் வட்டி, தவணையை திருப்பி செலுத்த தவறும்போது கந்துவட்டிக்காரர்கள் மனிதாபிமானமின்றி கடுமையான வார்த்தைகளால் பேசி பணம் வசூலிக்கிறார்கள்.
சில நேரங்களில் கந்து வட்டிக்காரர்கள் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இவர்களின் அடாவடித்தனமான நடவடிக்கைகளை குடும்பமானம் கருத்தில் கொண்டு கடனாளிகள் போலீஸ் நிலையத்திற்கு சொல்லாமல் மறைத்து துன்பப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சிலர் விபரீத முடிவுகள் எடுக்கின்றனர். கந்து வட்டி, மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே கந்துவட்டி, மீட்டர் வட்டி பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முறையாக போலீஸ் நிலையங்களில் புகார் செய்யலாம். நேரில் புகார் அளிக்க முடியாதவர்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியே சொல்ல தயங்குபவர்கள், மேற்படி கந்துவட்டிக்காரர்களை பற்றி அறிந்தவர்கள் அதுகுறித்த தகவல்களை கோவை மாநகர போலீசாரின் தொலைபேசி எண் 9498181213 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலமாகவும், 8190000100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் புகார் மனு அனுப்பலாம். இவர்களின் பெயர் ரகசியம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.