September 24, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் புதிய மென்பொருள் ஒருங்கிணைப்பு பணிகள் நிறைவடைந்து வரி வசூல்,குடிநீர் கட்டணம் செலுத்தும் பணிகள் துவங்கிய நிலையில் மீண்டும் மென்பொருள் பணிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வரி வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோவை மாநகராட்சியில் யூ.டி.ஐ.எஸ் எனப்படும் புதிய மென்பொருள் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஆகஸ்ட் 9 முதல் 15 ஆம் தேதி வரை வரி வசூல் பணிகள் நிறுத்தப்படுவதாக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, அனைத்து விதமான வரிவசூல் பணிகள், புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு,வணிக உரிமம் தொடர்பான சேவைகள்,சொத்துவரி கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்தும் இணையதள வசதிகளும் அந்த நாட்களில் செயல்படாது என தெரிவிக்கப்பட்டது. இதனால், மக்கள் அவதி அடைந்தனர்.
அதன் பின்னர் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் அனைத்து பணிகளும் துவங்கின. இதனிடையே மென்பொருள் ஒருங்கிணைப்பு பணிகளுக்கு பிறகு அவ்வபொழுது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் வரி வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுகிறது என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் இப்பிரச்சனை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.