September 24, 2021 தண்டோரா குழு
கோவையில் கடந்த சில மாதங்களாக சாலையோரங்களிலும், வீடுகளுக்கு வெளியேவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன.
இதையடுத்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில், மாநகர் பகுதியில் அவர்கள் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் செல்வபுரத்தை சேர்ந்த அரவிந்த் என்கிற அசாருதீன் (28), பட்டிணத்த்தை சேர்ந்த கார்த்திக் என்கிற ரஞ்சித்குமார் (26), குனியமுத்தூரை சேர்ந்த முகமது சாதிக் (24) என்பது தெரியவந்தது.
இவர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 12 இருசக்கர வாகனங்களை மீட்டனர்.