September 26, 2021 தண்டோரா குழு
வால்பாறையில் தங்கும் விடுதியில் தங்கியிருந்த உயா்நீதிமன்ற நீதிபதி மகனிடம் தகராறு செய்ததாக கைதான வனச் சரகருக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வால்பாறை வனச் சரக கட்டுப்பாட்டில் உள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 21ஆம் தேதி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியின் மகன் மற்றும் அவரது நண்பா்கள் தங்கி இருந்தனா். அன்றிரவு, அப்பகுதிக்கு ரோந்து சென்ற வால்பாறை வனச் சரகா் ஜெயசந்திரன் (35) அவா்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடா்பாக, வால்பாறை குற்றவியல் நீதிமன்ற தலைமை எழுத்தா் மனோகரன் அளித்த புகாரின்பேரில், வால்பாறை போலீஸாா் வனச் சரகா் ஜெயசந்திரனை வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதைக் கண்டித்து, வனத் துறையினா் 2 நாள்களாக தொடா்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனா். மேலும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத் துறையினா் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை மாஜிஸ்திரேட் 1ஆவது நீதிமன்றத்தில் ஜெயசந்திரன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவின் மீதான விசாரணை சனிக்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.