September 27, 2021 தண்டோரா குழு
கொடிசியாவின் டிபன்ஸ் இன்னோவேசன் மற்றும் அடல் இன்குபேசன் சென்டர் (சிடிஐஐசி) சார்பில் இந்திய ராணுவத்துக்கு தேவையான உள்நாட்டு தயாரிப்புகள் குறித்த காட்சி விளக்க கருத்தரங்கு மற்றும் புதிதாக தொழில் துவங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்றமும் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் துவங்கி வைத்த ராணுவம் மற்றும் வான்வெளித் துறைகளில் புத்தாக்கங்களை வளர்த்தெடுக்கவும், தொழில்நுட்ப மேம்பாடு தன்னிறைவு காணவும் உதவுகின்ற உள்நாட்டுத் தயாரிப்புகள் குறித்த காட்சி விளக்கம் 5.0-ன் தொடர்ச்சியே இந்நிகழ்வு ஆகும்.நிகழ்வில் சிடிஐஐசி இயக்குநரும், கொடிசியா தலைவருமான ரமேஷ் பாபு வரவேற்று பேசினார்.
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிடிஐஐசி பணிகள் குறித்து, அதன் இயக்குநரும், கொடிசியா முன்னாள் தலைவருமான சுந்தரம் அறிமுக உரையாற்றினார்.பாதுகாப்பு துறை சார்ந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உள்ள நிதி வாய்ப்புகள் குறித்து அதன் இயக்குநர் நிதி பன்சால் காணொளி மூலம் விளக்கிக் கூறினார்.
மத்திய பாதுகாப்புத் துறை புத்தாக்க நிறுவன திட்ட அதிகாரி விஷ்ணு பிரதாப், பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் ராஜசேகர் நிகழ்வில் பங்கேற்று பேசினர்.
தொடர்ந்து இந்நிகழ்வில் பங்கேற்ற கோவை, மதுரை, ஐதராபாத்தை சேர்ந்த 4 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், சிடிஐஐசி.,யின் தொழில் வளர்த்தெடுப்பு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.