September 29, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட தொட்டராயன் கோவில் வீதி மாநகராட்சி வணிக வளாகத்தில் 63 கடைகள் உள்ளது. இதில் சில கடைகள் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக மாதாந்திர வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனர்.
மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி உதவி கமிஷனர் (வருவாய்) செந்தில்குமார் ரத்தினம், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமார், சிறப்பு வரி ஆய்வாளர் மணிகண்டன், சிறப்பு வரி ஆய்வாளர் உள்ளிட்டோர் இணைந்து அந்த வணிக வளாகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது நீண்ட வருடங்களாக கடை வாடகை செலுத்தாமல் இருந்த 15 கடைகளை பூட்டி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த 15 கடைகளுக்கும் ரூ.17.03 லட்சம் வாடகை நிலுவை தொகை உள்ளது. இந்த நிலுவை தொகையினை உடனடியாக செலுத்தும் பட்சத்தில் மாநகராட்சியால் இக்கடைகள் திறந்து விடப்படும் என மாநகராட்சி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.