September 29, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் 8வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் முன்களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின், அவர் முன்களப்பணியாளர்களிடம் கூறியதாவது:
வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்களை கண்டறியும்போது, வீட்டிலுள்ள அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும். கொசுவினால் ஏற்படும் டெங்கு போன்ற நோய்களை தடுப்பதற்காக பொதுமக்களிடம் வீடுகளில் உபயோகமற்ற பொருட்கள், பயனற்ற பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை கொசுக்கள் புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து சேரன் நகர் பகுதியில் 6 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து விநியோகப்படும் குடிநீர் பணிகள் குறித்து பார்வையிட்டார். கிருஷ்ணம்பதி குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளையும் பார்வையிட்டார்.