October 3, 2021 தண்டோரா குழு
கோவை உக்கடம் பகுதியில் அனைத்து ஜமாத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி கூட்டமைப்பு சார்பில் அசாம் மாநில பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமுறை தலைமுறையாக அசாம் மாநிலத்தில் வசித்து வரும் முஸ்லிம் மக்களின் குடியுரிமைப் பதிவு விவகாரத்தின் அடிப்படையில் அவர்களின் குடியுரிமையைப் பறிப்பதும், எந்த ஒரு முன்னறிவிப்பும், மாற்று ஏற்பாடும் இல்லாமல் அவர்களின் குடியிருப்புகள் அகற்றப்படுவதுமாக தொடர்ச்சியாக பாஜக அரசு அரங்கேற்றி வருகின்றது.
அசாமில் உள்ள முஸ்லிம்களில் 10 சதவீதத்தினர் கூட உண்மையான முஸ்லிம்கள் இல்லை என்று கூறும் பிஜேபியால் அதனை நிரூபிக்க முடியவில்லை. அசாமின் பூர்வகுடி மக்களை சொந்த இடத்திலிருந்து அகற்றி அவர்களை அகதிகளாக மாற்ற முயற்சிக்கும் அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு பட்டு வருகிறது.
இதை கண்டிக்கும் விதமாக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பகுதியில் அனைத்து ஜமாத், இஸ்லாமிய இயக்கம் மற்றும் அரசியல் கட்சி கூட்டமைப்பு சார்பில் அசாம் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு அசாம் மாநில பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.