October 12, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் இருந்து நிலுவை தொகையில் இருந்து ரூ.13.50 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சிக்கு பல்வேறு நிறுவனங்கள், கடைகள் வணிக வளாகங்கள் வைத்துள்ள நிலுவை வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி 2 தனியார் செல்போன் நிறுவனங்கள் கண்ணாடி இழை கேபிள் அமைத்தற்கான தட வாடகை கட்டணம் ரூ.10 கோடியே 73 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இதனைத்தொடர்ந்து நீண்டகாலமாக மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாமல் இருந்தவர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட தியாகிகுமரன் மார்க்கெட் கடைகள், தொட்டராயன் கோவில் வீதி கடைகள், பட்டேல் ரோடு கடைகள், அவினாசி ரோடு வணிக வளாக கடைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் இருந்து வாடகையாக கடந்த 20 நாட்களில் ரூ.2 கோடியே 77 லட்சம் வசூலிக்கப்பட்டு உள்ளது.மேலும் தொடர்ந்து நீண்டகாலமாக வாடகை செலுத்தாமல் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். இதுவரை நிலுவை தொகை ரூ.13 கோடியே 50 லட்சம் வசூலாகி உள்ளது.
இதுதவிர மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்கு வாடகை ரூ.1 கோடியே 7 லட்சத்தை செலுத்த கோரி உணவு பொருள் வழங்கல் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட துறை ரூ.34 லட்சம் வழங்ககோரி அதன் இயக்குனருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.