October 16, 2021 தண்டோரா குழு
முதல் முறையாக கோவை சூலூர் விமானப்படை தளத்தில் ஒரே நேரத்தில் 14 தேஜஸ் விமானங்கள் அணிவகுத்துச் சென்றது.
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் மற்றும் தேஜஸ் விமானங்கள் அவ்வப்போது விமானப்படை அதிகாரிகள் கொண்டு பயிற்சி எடுப்பது வழக்கம். இந்நிலையில் 14 தேஜஸ் போர் விமானங்கள் ஒரே நேரத்தில் சூலூர் விமானப்படை தளத்தில் மேலே பறந்து சென்று பயிற்சியில் ஈடுபட்டது. மேலும் 14 தேஜாஸ் விமானங்கள் ஒரே நேரத்தில் பறப்பது இதுவே முதல் முறையாகும்.
சீனா அவ்வப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி வருவதால் இந்தியா போர் விமானங்களை தயார் நிலையில் வைக்க தற்பொழுது பயிற்சி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உள்நாட்டு தயாரிப்பான இந்த தேஜஸ் விமானம் வேகமாகவும், திடீரென பக்காவாட்டிலும், மேலும் கீழுமாகவும் சுழன்று கூடியது.
இந்த ஆயுதம் தாங்கிய விமானம் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட நிலையில், அதன் ஒத்துழைப்பால் தற்போது இந்த சாகசமும் சாத்தியமாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.