October 16, 2021 தண்டோரா குழு
கோவையில் நகை வாங்க கடைவீதிக்கு பேருந்தில் சென்ற இளம்பெண்ணிடம் ரூ.18 ஆயிரம் திருடிய பெண்ணை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் கற்பகம்(23). இவர் நேற்று நகை வாங்குவதற்காக அரசு பேருந்தில் ஒப்பணக்கார வீதிக்கு புறப்பட்டார். பிரகாசம் பேருந்து நிறுத்தத்தில் இறங்க முற்பட்டபோது பெண் ஒருவர் திடீரென கற்பகத்தின் கைப்பையை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார்.
அதில் நகை வாங்குவதற்காக ஏடிஎம் கார்டு மற்றும் ரூ.18,600 ரொக்கம் வைத்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கற்பகம் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்ற அந்த பெண்ணை பிடித்து கடைவீதி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மதுரையை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி பார்வதி(33) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து பணத்தை மீட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் கலைவாணி(38).இவர் நேற்று தனியார் பேருந்தில் காந்திபார்க்கில் இருந்து பால் கம்பெனி சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் அருகே இருந்த பெண் ஒருவர் கலைவாணி கையில் வைத்திருந்த பர்சில் இருந்த ரூ.450 ஐ நைசாக திருட முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இதனையடுத்து சக பயணிகள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர் மதுக்கரை அருகேயுள்ள நாச்சிபாளையத்தை சேர்ந்த திவாகர் என்பவர் மனைவி முத்தம்மா(24) என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.