December 10, 2016 தண்டோரா குழு
“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. இதற்கு அப்பல்லோ மருத்துவமனை தலைவர் விளக்கம் தரவேண்டும்” என்று நடிகர் மன்சூர் அலி கான் வலியுறுத்தினார்.
நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
“மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. 21ம் தேதி நல்ல உடல் நலத்தோடு நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர். மறுநாள் எப்படி இத்தனை சீரியசாக முடியும்?
அப்படியே உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்தாலும் அதை ஏன் ரகசியமாக வைக்க வேண்டும்?
தமிழக கவர்னர், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி என பலரையும் பார்க்கவிடாமல் தடுத்தது ஏன்?
சாதாரண காய்ச்சல் என்றுதானே சொன்னார்கள்? பின்னர் பார்க்க முடியாத அளவுக்கு ரகசியம் காத்தது ஏன்?
75 நாட்கள் அடைத்து வைத்து இல்லாமல் செய்வதற்கு என்ன காரணம்?
மருத்துவமனைக்கு பேசும் நிலையில் சென்றாரா? அல்லது நினைவிழந்த நிலையில் சென்றாரா?
இதற்கான சி.சி. டி.வி. காட்சிகள் வெளியிடப்பட வேண்டும். அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
தேவைப்பட்டால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேள்வி கேட்பேன். அத்துடன் சட்ட ரீதியாக வழக்கும் போடுவேன்
ஒரு சாமானிய குடிமகனாக இந்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறேன்” இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.