October 27, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், சி.எஸ்.ஆர். நிதி வழங்கும் நிறுவனங்கள் அடிப்படை பணிகளுக்கு குறிப்பிட்ட நிதி அளித்தால், மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட நிதி பங்களிப்பு செய்யப்பட்டு மக்கள் பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் மாநகராட்சி கிழக்கு மண்டலம் 57-வது வார்டு பகுதியில் உள்ள மசக்காளிபாளையத்தில் செயல்படும் மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நிறைவேற்ற உதவும் வகையில், கோவை சூலூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ரூ.26 லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘5 வகுப்பறைகள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.5 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.55 லட்சம் வரை செலவாகும். இதற்கான செலவில் ரூ.26 லட்சத்தை தனியார் நிறுவனத்தினர் அளித்துள்ளனர்,’’என்றார்.