December 12, 2016 தண்டோரா குழு
வர்தா புயல் காரணமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி 4 மாவட்டங்களில் 4௦௦௦க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள வர்தா புயல் தற்போது (டிசம்பர் 12) கரையை கடந்துக்கொண்டிருக்கிறது. சென்னையில் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடல்சீற்றம் தொடர்ந்து அதிகரித்துள்ளதால் கடலூர், புதுச்சேரியில் கடற்கரையோர சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பழவேற்காடு மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி சென்னை, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் கடலோரம் வசிக்கும் 4622 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனிடையே வர்தா புயல் அபாயம் நீங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
புயல் மற்றும் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில், சென்னை எழிலகத்தில் விரிவான ஆலோசனை திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேசியதாவது;
வர்தா புயலால் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மேடான மற்றும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும், புயல் கரையைக் கடந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, மக்கள் வெளியே வர வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.