December 13, 2016 தண்டோரா குழு
மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை ஏழைகள் மீதான மிக மோசமான தாக்குதல் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 8-ம் தேதி பழைய ரூ.500, 1000 செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால் பொதுமக்கள் வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன.
இந்நிலையில் ரூபாய் நோட்டு வாபஸின் விளைவை உணர வேண்டுமானால் பிரதமர் மோடி ஏ.டிஎம் இயந்திரங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலவரத்தை காண வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது;
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை ஏழைகள் மீதான மிக மோசமான தாக்குதல். பணமதிப்பு நீக்கத்தின் உண்மையான விளைவை உணர வேண்டுமானால் பிரதமர் மோடி ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலவரத்தை காண வேண்டும்.
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற விவரங்களையும், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டவை தொடர்பான குறிப்புகளையும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என்றார்.