November 13, 2021 தண்டோரா குழு
கோவையில் ஏடிஎம் சென்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை உப்பிலிபாளையம் பார்க் தெருவை சேர்ந்தவர் சவுந்தராஜன் மனைவி அமிர்தவள்ளி(56). இவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் புதிதாக வங்கி கணக்கு துவங்கினார். இதனையடுத்து வங்கியில் பெறப்பட்ட ஏடிஎம் கார்டை ஆக்டிவேட் செய்து பணம் எடுக்க நேற்று அவர் சிங்காநல்லூரில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் அமிர்தவள்ளிக்கு உதவி செய்வது போல் அவரது ஏடிஎம் கார்டை வாங்கினார்.
பின்னர் ஏடிஎம் கார்டை ஆக்டிவேட் செய்து புதிய ரகசிய எண்ணை பதிவிட்டு அவரிடம் கார்டை கொடுத்து விட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து பல கட்டங்களாக அமிர்தவள்ளியின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அமிர்தவள்ளி தனது ஏடிஎம் கார்டை பார்த்தபோது அது வேறொரு வங்கியின் ஏடிஎம் கார்டு என்பது தெரியவந்ததது. மர்ம நபர் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து விட்டு ரூ.50 ஆயிரம் நூதன மோசடி செய்துள்ளார்.
இது குறித்து அமிர்தவள்ளி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.