November 14, 2021 தண்டோரா குழு
கோவை 12 ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியை தனிப்படை போலீசார் பெங்களூரில் கைது செய்த நிலையில் உயிரிழந்த மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்று கொண்டனர்.
கோவையில் தனியார் பள்ளியில் மாணவி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியை மாற்றிய மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை மேற்கு மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே ஆசிரியருக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது குற்றம்சாட்டிய மாணவியின் பெற்றோர், உடலை வாங்க மறுத்துடன், தங்களது மகளின் தற்கொலைக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன் அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்தனர்.தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை தேடி வந்த நிலையில் அவர் பெங்களூரில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பெங்களூரு விரைந்த தனிப்படை போலீசார் அங்கு தலைமறைவாக இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.
பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூரில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு காவல்துறையினர். விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டுள்ளதால் போராட்டத்தை கைவிட்ட பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவியின் பெற்றோர் மாணவியின் பெற்றோர் உடலைப் பெற்றுக்கொண்டனர்.
கோவை அரசு மருத்துவமணை பிணவறையில் இருந்து மாணவியின் உடல் அமரர் ஊர்தி வாகனத்தில் அவரது வீட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மாணவியின் உடலை பார்த்து மாணவியின் தாய் மற்றும் அவர்களது உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக உயிரிழந்த மாணவியின் வீட்டிற்குச் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இருவரும் மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதலமைச்சரின் அறிவுத்தலின் பேரில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். இது தனிப்பட்ட பெண்ணுக்கு நடந்த நிலைமை என்று பாராமல் எனது சொந்த பெண் குழந்தைக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அந்த நிலையில்தான் நான் இருக்கிறேன். முதல்வர் மீதும் நடவடிக்கை வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். பாரபட்சமின்றி இந்த சம்பவத்தின் நடவடிக்கை எடுக்கப்படும். விழிப்புணர்வு என்பது அனைவர்களுக்கும் தேவை தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அது தேவைப்படுகிறது அதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் இருபத்தி நான்கு மணி நேரத்தில் நடவடிக்கை. வீட்டில் கிடைத்த கடிதம் குறித்து விசாரணை நடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார். மேலும் உயிரிழந்த மாணவியின் உடல் ஆத்துப்பாலம் மின் மயானத்தில் இன்று மதியம் தகனம் செய்யப்பட இருக்கிறது.