December 13, 2016 தண்டோரா குழு
வர்தா புயல் காரணமாக சென்னை சோழிங்கநல்லூரில் திங்கட்கிழமை 38 செ.மீ., மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை கூறியதாவது:
வர்தா புயலின் மேல் பகுதி சென்னையை கடந்த போது, மணிக்கு 114 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. புயலின் கீழ்பகுதி சென்னையை கடந்த போது, மணிக்கு, 72 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகபட்சமாக, சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், 38 செ.மீ., – காட்டுப்பாக்கத்தில், 34 செ.மீ., – காஞ்சிபுரத்தில், 28 செ.மீ., மழை பெய்தது.
சென்னையை கடந்து சென்ற புயல், தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக, தர்மபுரியில் இருந்து, 40 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட பகுதிகளில், பரவலாக மிதமான மழை பெய்யும். சில இடங்களில் கன மழை பெய்யலாம். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.